Thursday, November 17, 2011

கடவுள்





விக்னேஸ்வரர் துதி



கஜானனம் பூதம கணாதி சேவிதம்



கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்



உமாசுதம் சோக விநாச காரணம்



நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்












கடவுள் - விளக்கம்.





அறிவென்பது ஆண். மனம் என்பது பெண். பஞ்ச இந்திரியங்கள் அவர்களது மக்கள். மாயையின் சேயான சபலத்தினால் உணர்ச்சிவசப்படாமல் மனம் என்ற அன்னைக்கும் அறிவென்னும் தந்தைக்கும் கட்டுப்பட்டு உலகத்தையே மறந்து ஒன்றையே நோக்கி ஆத்ம வேகத்தோடு இதய சன்னிதானத்தின் உள்கடந்து செல்லும், அப்படி உள்கட... உள்கட... உள்கட... உள்கட... கட... வுள் என்ற அகப்பொருள்தான் கடவுள்




பிள்ளையார் சுழியின் பொருள்



பிள்ளையார் சுழி பிரணவத்தைக் குறிக்கும். அதனாலேயே பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல், இடையூறின்றி நடந்தேற கணபதியை முன்னிறுத்தி வழிபடுவதைக் குறிக்கும்



இஷ்ட தெய்வ வழிபாடு



ஒவ்வொருவரும் தனக்கு இஷ்டமான தெய்வத்தை வழிபட்டு வருவதையே இஷ்ட தெய்வ வழிபாடு என்கிறோம். இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வருபவர்கள் எப்போதும் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பர், எப்போதும் இஷ்ட தெய்வ கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவர். இஷ்ட தெய்வத்தை ஏகமாக வழிபாடு செய்து பூஜித்து வருவர். இந்நிலையில் இஷ்ட தெய்வம் அவரை எந்நிலையிலும் காக்கும் என்பது நம்பிக்கை. எனவே ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்தமான இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்து வரலாம்.



குல தெய்வ வழிபாடு



நம் மூதாததையர் காலம் காலமாக வழிபட்டு நம் குலத்தைக் காக்கும் தெய்வமே குல தெய்வமாகும். குலதெய்வம் எந்த ஊரில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறதோ அங்கு சென்றுதான் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். குல தெய்வமே நமது குலத்திற்கும் சந்ததியினருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து நிறுத்தி நன்மை செய்ய வல்லது என்பது நம்பிக்கை. அவ்விதமான குலதெய்வ வழிபாட்டை நிறுத்திவிட்டாலோ, குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருந்தாலோ பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது கருத்து. குல தெய்வ வழிபாட்டால் யோக பலன்களை பெறலாம். சந்ததியினரின் மேன்மை உயரும். குல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் ஒவ்வொரு அமாவாசை நாளிலும், பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி நாளிலும் கண்டிப்பாக வழிபட்டு வரவேண்டும். குல தெய்வம் தெரியாதவர்கள் அவரவர் ஜாதக கட்டத்தில் லக்கனத்திலிருந்து 9வது இடம் எந்த கிரகத்திக் வீடோ அல்லது எந்த கிரகம் இருக்கிறதோ அல்லது எந்த கிரகத்தின் பார்வை உள்ளதோ அந்த கிரகத்தின் அதிதேவதையை வழிபட்டு வர குலதெய்வ வழிபாட்டின் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.



ஒவ்வொரு கிரகங்களின் அதிதேவதை பின்வருமாறு



சூரியன் - சிவன்



சந்திரன் - பார்வதி



செவ்வாய் - சுப்ரமண்யர்



புதன் - விஷ்ணு



குரு - பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி



சுக்கிரன் - லக்ஷ்மி (இந்திரன்), வருணன்



சனி - யமன் சாஸ்தா



ராகு - காளி, துர்க்கை, கருமாரியம்மன்



கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்


ஓம் எனும் பிரணவம்


ஓங்காரமே உலகின் முதல் ஒலி. எழுத்துக்களின் முதலாய் விளங்கவதும் ப்ரணவமே. நமது தெய்வங்களின் மூல மந்திரங்களை உச்சரிக்கும் போது அவற்றை ஓம்காரத்தில் தொடங்கிச் சொல்வதாலேயே அதற்குரிய பலன் கிட்டும். உபநிஷதம் ஓம் என்ற மந்திரத்தில் அ, உ, ம், என்ற மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பு சேர்ந்திருக்கிறது. இதில் அ என்ற ஓசை நம்முடைய வயிற்றுப் பகுதியில் இருந்து சக்தியுடன் எழுந்து வருகிறது. உ என்பது நம்முடைய கண்டத்திலிருந்து (கழுத்து) புறப்படுகிறது. ம் என்பது உதட்டில் முடிகிறது. இந்த மூன்று மொழியை அமைக்கும் ஒலி பிரதிபலிக்கும் செயல்களாக அமைகின்றன. ஆரம்பம், இடை, முடிவு என்ற மூன்று நிலைகளை அவை காட்டுகின்றன. நமது முனிவர்கள் இந்த மூன்றையும் இணைத்தே ப்ரணவ மந்திரமாக அமைததிருக்கிறார்கள். ஒவ்வொரு ஜீவனும் விழிப்பு (ஜாக்ரத) கனவு (ஸ்வப்ன) உறக்கம் (கஷீபதி) என்ற மூன்று நிலைகளையும் இணைத்து உடம்பால் மூன்று பகுதிகளையும் சேர்க்கும் ஓம் என்ற மந்திரம் காட்டுகிறது. நாம் உட்கார்ந்து ஓம் என்று சொல்லும் போது இத்தத்துவத்தை முழுமையாக உணர வேண்டும்.


கற்பூரத்தின் தத்துவம்


கற்பூரம் எரியும் போது கரியோ, சாம்பலோ இல்லாமல் தன் வாசனையை ஞானத் தீயிலிட்டு எதுவும் மீதமிமல்லாத நிலையில் தெய்வத்தை அடைகிறது. அதுபோல ஆன்மா இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குகிறது.


திருநீறு


விபூதியே பஸ்மம். விபூதியே சிவம். சிவமே பஸ்மம். தான் பஸ்மமாய் இருந்து நாஸ்திகத்தையும் பஸ்மம் செய்வது விபூதி. உலகிலுள்ள பொருட்களை எரியில் சுட்டால் சங்கைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் கருமையாகிவிடுகின்றன. கரிய சாணத்தின் உருண்டையை எரியில் இட்டால் அது வெண்மையாகிறது. கருமை வெண்மையாக மாறிய திருநீறு உள்ளக் கருமையை மாற்றி ஞானவொளியை நல்குந் தெய்வத்தன்மை வாய்ந்தது. அத்தகைய திருநீற்றை ஆணவம், கண்மம், மாயை என்னும் முக்குற்றங்களும் அகல வேண்டும் என கருதி வலக்கை நடுவிரல் மூன்றினாலும் வடக்கு அல்லது கிழக்கு முகமாக இருந்து நெற்றியில் மூன்று கோடு வடிவாக விபூதி எனும் பஸ்மத்தை அணிய வேண்டும். விபூதியை அணியும்போது அது நிலத்தில் சிந்தா வண்ணம் அண்ணாந்து ஓம் சிவ சிவ என கூறி அணிதல் வேண்டும்.